Sunday, August 4, 2013

வாழைத்தண்டு மோர்கூட்டு



தேவையானவை: இளம் வாழைத்தண்டு - 2 துண்டு (வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மோர், தயிர் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிறிது தண்ணீரில் மோர் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை போட்டு வைத்து எடுத்து, பின்பு தண்ணீரில் வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஆறியவுடன் சிறிது தயிர் கலக்கவும்.
குறிப்பு: பித்தப்பையில் கல் இருந்தால், வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட... குணமாகும். நிரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து வாழைத்தண்டு.

வாழைப்பூ வடை



தேவையானவை: வாழைப்பூ (சிறியது) - ஒன்று, துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து களைந்து, வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதில் மஞ்சள்தூள், வதக்கிய வாழைப்பூவை சேர்த்துப் பிசையவும். காடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: வாழைப்பூ உடலுக்கு மிகவும் நல்லது.

பொட்டுக்கடலை உருண்டை



தேவையானவை: பொட்டுக்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டுக் கரைத்து வடிக்கட்டி, பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு உருட்ட வந்தால்... அதுதான் சரியான பதம்). பொட்டுக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை விட்டு கிளறி, உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: புரோட்டீன் சத்து அதிகம் உள்ள இந்த உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

Saturday, August 3, 2013

காராமணி கூட்டு

தேவையானவை: காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை சேர்த்து அரைக்கவும். இதை வேக வைத்த காராமணியுடன் சேர்த்து, வேக வைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

கறுப்பு உளுந்து பொடி.

தேவையானவை: முழு கறுப்பு உளுந்து - 200 கிராம், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கறுப்பு உளுந்து, மிளகு, மிளகாயை ஒன்று சேர்த்து எண்ணெயில் வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட... மிகவும் ருசியாக இருக்கும். உளுந்து பொடி எலும்புகளை வலுவடையச் செய்யும்.

வேர்க்கடலை உருண்டை

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: வேர்க்கடலையை நன்றாக தேய்த்துப் புடைத்து, தோல் நீக்கவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால் அதுதான் சரியான பதம்). கடலையை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, பாகை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, பிறகு உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: கிராமப்புறங்களில் கடலை உருண்டை முக்கியமான தின்பண்டம்.

கேழ்வரகு இனிப்பு தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு - 250 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி.
செய்முறை: கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடிகட்டவும். இதை மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்து, தோசைகளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
குறிப்பு: தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை. திடீர் மாவுகளுக்கு பதிலாக கேழ்வரகு மற்றும் அரிசியை தனித்தனியாக ஊற வைத்து அரைத்தும் தயாரிக்கலாம். வெல்லத்துக்கு பதில் கருப்பட்டியும் சேர்க்கலாம்.

முருங்கைக்கீரை பொரியல்

தேவையானவை: பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன், முருங்கைக்கீரை - 10 ஆர்க்கு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பாதி வெந்ததும், ஆய்ந்து நறுக்கிய முருங்கைக்கீரையை அதில் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி, கலவையை பிழிந்து நீரை நீக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல், கீரை - பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக் கீரையில் தங்க பஸ்பம் சத்து உள்ளது. இரும்பு சத்தும் உள்ளது. அடை, வடை, கூட்டு, பொரியல், பக்கோடா என்று பலவிதமாக தயாரித்து பயன்பெறலாம்.

Friday, August 2, 2013

காலிஃப்ளவர் கிரேவி

தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று, வெங்காயம் - 4, பூண்டு - 8 பல், முந்திரிப்பருப்பு - 10, காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு, லவங்கம் - 2, பட்டை - 2 சிறு துண்டுகள், சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:  காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும். முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, லவங்கம், பட்டை, சீரகம், தனியா, தேங்காய் துருவல், மஞ்சள்தூள், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவர் துண்டுகளுடன், வெங்காயம் - பூண்டு விழுது, அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசிறிய காலிஃப்ளவர் துண்டுகளை சேர்க்கவும் பிறகு அதில் ஒரு கப் நீர் விட்டு, சுமார் 20 நிமிடம் மூடி வைக்கவும் (மசாலா வாணலியில் ஓட்டமாலிருக்க அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்)
காலிஃப்ளவர் வெந்து கிரேவி ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சென்னா பேடா

தேவையானவை: வெள்ளை சென்னா - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, வெங்காயத்தாள் - 5, பூண்டு - 4 பல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சென்னாவை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள், ஊறிய சென்னாவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும், அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை சேர்த்து... மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

வெஜிடபிள்ஸ் க்ரிஸ்பி

தேவையானவை: கோஸ் - 100 கிராம், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பல், மைதா - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 4 டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: கோஸ், கேரட், குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்¬றை நீள நீளமாக ஒரு இன்ச் அளவுக்கு மெல்லியதாக நறுக்கவும். இதனுடன் நறுக்கிய பூண்டு, மைதா, மிளகாய்த்தூள், கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

கேரட் சூப்

தேவையானவை: கேரட் துண்டுகள் - 2 கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் - தலா ஒரு சிட்டிகை, காய்கறி வேக வைத்த நீர் - 2 கப், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். பிறகு கேரட் துண்டுகள், காய்கறி வேக வைத்த நீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). பின்னர் இதை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு அடித்து, உப்பு சேர்த்து நன்கு வடிகட்டி,  மீண்டும் வாணலியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இதை பௌலில் ஊற்றி, மேலே க்ரீம் சேர்த்து புதினா, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குஸ்கா

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கொத்தமல்லித் தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை, லவங்கம் - தலா ஒன்று, தேங்காய்ப் பால் - ஒரு கப், எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும், வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும், குக்கரில் நெய், எண்ணெய் விட்டு... பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் - தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் மற்றும் ஒரு கப் நீர், உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் கழுவிய அரிசியை சேர்த்து, குக்கரை மூடி, நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு (அடுப்பை 'சிம்’மில் வைத்து) 10 நிமிடத்துக்குப் பிறகு நிறுத்தவும். பிரஷர் போனதும் குக்கரைத் திறக்க... ஹாட் ஸ்பைஸி குஸ்கா 'கமகம’வென்று தயார் நிலையில் இருக்கும்.

பிரிஞ்சால் ஸ்டூ

தேவையானவை: கத்திரிக்காய் (விதையில்லாதது) - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் - ஒன்று, புளி - எலுமிச்சை அளவு,  கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, லவங்கம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - சின்ன கோலிகுண்டு அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா  - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, கசகசா - 4 டீஸ்பூன், முந்திரி - 3, வெந்தயம் - ஒரு சிட்டிகை.
செய்முறை:  வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை, எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்யவும். கத்திரிக்காயை ஓரங்குல சதுரத்துண்டுகளாக அரிந்து கொள்ளவும். தேங்காயைத் துருவி, சிறிது நீர் விட்டு அரைத்து 3 முறை பால் எடுத்து, மூன்றையும் தனித்தனியே வைக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்துள், லவங்கம் தாளித்து... கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரைசல், வெல்லம் சேர்க்கவும். பிறகு வறுத்துப் பொடித்த மசாலாப்பொடி, மூன்றாம்  முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும். நன்கு கொதிக்கும் இரண்டாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்க்கவும். கிரேவி சற்று கெட்டியானதும் முதல் முறை எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி நன்கு கிளறி, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி, பரிமாறவும்.

ஸ்பைஸி வெஜ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 2, உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, பச்சைப் பட்டாணி -  ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 6, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், தனியா, கசகசா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய், நெய் - தலா அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அவற்றை தனித்தனியாக, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரி, இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சீரகம் ஆகியவற்றை கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில்  நன்கு அரைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கத்தை நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
குக்கரில் நெய், வெண்ணெய் சேர்த்து உருக்கி... பட்டை - லவங்கப் பொடியை சேர்த்து, நறுக்கிய காய்கறிகளையும். உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  இதனுடன் அரைத்த வெங்காயம், அரைத்த தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரைத்த பச்சை மிளகாய் மசாலா விழுதையும் சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்த்து, கொதி வந்ததும், கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இந்த பிரியாணியின் வாசனை ஆளைத் தூக்கும்.