Thursday, August 8, 2013

பச்சை மிளகு ஊறுகாய்

 
தேவையானவை: பச்சை மிளகு - 2 கப், இஞ்சித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுத்துள்ள எல்லாவற்றையும் கலந்து, பாட்டிலில் போட்டு, ஒரு வாரம் நன்றாக ஊற விடவும். பிறகு பயன்படுத்தவும்.

வெந்தய மாங்காய் ஊறுகாய்

 
தேவையானவை: தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 2 கப், வெந்தயத்தூள் (கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் சீவி வைத்துள்ள மாங்காய்த் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். லேசாக வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கிளறி ஆற வைத்து, ஜாடியில் போட்டு வைக்கவும்.

உப்பு நார்த்தங்காய்

 
தேவையானவை: நார்த்தங்காய் துண்டுகள் - 4 கப், மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, 3 நாட்கள் ஊற விடவும். நாலாம் நாள் காயை மட்டும் எடுத்து வெயிலில் காய விடவும். மாலை ஜாடியில் உள்ள தண்ணீரில் போடவும். இது போல ஒரு வாரம் செய்து, எடுத்து ஜாடியில் வைத்துக் கொள்ளவும். 
நார்த்தங்காயை சுருள் சுருளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்தும் செய்யலாம.

பூண்டு-வெங்காயக் குழம்பு

தேவையானவை:


நாட்டுப் பூண்டு – 4 பல்,
சாம்பார் வெங்காயம் – 10,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 1
கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – அரை கப்,
கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு,
புளித் தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை:

பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , கொத்தமல்லி தாளித்து, உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு வறுத்து, புளித் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.

விருப்பப்பட்டால் கொதிக்கும்போது . தக்காளியும் சேர்க்கலாம். ருசி கூடும்.

பூண்டு இறால் குழம்பு

 தேவையான பொருட்கள்: 
இறால் - 250 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 
தக்காளி - 4 (நறுக்கியது) 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
சர்க்கரை - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
 செய்முறை: 
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 
பின் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும். 
அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 1 நிமிடம் வேக வைத்து, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும். 
 இறாலானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பூண்டு இறால் குழம்பு ரெடி!!

சோயா கிரானுல்ஸ் கட்லெட்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2,  சீஸ் - சிறிதளவு (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, பிரெட் ஸ்லைஸ் - 4, மைதா - 4 டேபிள்ஸ்பூன், ரஸ்க் தூள், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: சோயா கிரானுல்ஸை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு பிழிந்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, நன்கு பிழிந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். மைதாவுடன் சிறிதளவு நீர் சேர்த்து சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸ்களை நீரில் நனைத்துப் பிழிந்து, அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய சீஸ், சோயா கிரானுல்ஸ். அரைத்த பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உருட்டி, விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும். இதனை மைதா கரைசலில் முக்கியெடுத்து ரஸ்க் தூளில் புரட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கட்லெட்டுகளைப் போட்டு பொரித்தெடுத்து சுடச்சுட தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
குழந்தைகளை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இந்த கட்லெட்!

சோயா சங்க்ஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், சோயா சங்ஸ் - அரை கப், வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தயிர் - அரை கப், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை - சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, கொத்தமல்லி, புதினா இலைகள் - மொத்தமாக ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கவும்) தேங்காய்ப்பால் - ஒரு கப், வறுத்த முந்திரி - 6, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை மிகவும் மெல்லியதாக, நீளநீளமாக நறுக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, பிழிந்தெடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் 2 முறை நன்கு பிசைந்து கழுவவும். கடாயில் சிறிது நெய் விட்டு அதை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி... உப்பு, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி - புதினா இலைகள், வதக்கிய சோயா சங்க்ஸ் சேர்க்கவும். இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும், ஊற வைத்திருக்கும் அரிசியை நீர் வடித்து சேர்த்துக் கலக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டுமொரு முறை நன்கு கிளறி மூடவும். நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு (அடுப்பை 'சிம்’மில் வைத்து) 10 நிமிடம் கழித்து இறக்கி, வறுத்த முந்திரி தூவினால்... சூப்பர் சுவை, கமகம மணம் கொண்ட சோயா சங்க்ஸ் பிரியாணி தயார்.
இதற்கு வெங்காய தயிர் பச்சடி சரியான சைட் டிஷ்.

தயிர் சீடை

தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், தயிர் - கால் கப், சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்-பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் கை பொறுக்கும் சூட்டில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன், தேங்காய் துருவல், வெண்ணெய், பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து தயிர் விட்டுக் கலந்து, தண்ணீர் விட்டு உருட்டும் பதத்தில் பிசையவும். சீடைகளாக உருட்டி உலர்ந்த துணியில் போடவும். பிறகு அரை மணி நேரம் கழித்து, (ஈரப்பதம் போனதும்) எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

தக்காளித் தொக்கு

தேவையான பொருட்கள்

தக்காளி - 1/2 கிலோ
பச்சைமிளகாய் - 15
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 மேசைக் கரண்டி

செய்முறை

* தக்காளி காய்களை நன்றாகக் கழுவி, ஈரமில்லாமல் துடைத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தைப் போட்டு கடுகு வெடித்ததும் அரைத்த விழுதைப்போட்டு மஞ்சள்பொடி சேர்த்து கைவிடாமல் சுருள சுருள கிளற வேண்டும்.

* நன்றாக கெட்டியாக சுருண்டு வதங்கி வந்ததும், வெந்தயப் பொடியை போட்டு கிளறி, ஆறியதும் ஈரமில்லாத பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும். துணைப் பதார்த்தம் செய்ய நேரமில்லாத நேரங்களில் இந்த தொக்கு கைகொடுக்கும். காலை நேர அவசரத்தின் போதுகூட சட்னிக்குப் பதிலாக இந்த தொக்கை பயன்படுத்தலாம்.

தக்காளி மலிவாகக் கிடைக்கும் காலத்தில் தொக்கு தயாரித்து வைத்துக் கொண்டால் இட்லி, தோசை, தயிர் சாதம் முதலானவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம். 

மட்டன் தோ பியாஸ்

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 3/4 கப்
வெங்காயம் - 4 நறுக்கியது
பூண்டு - 2 (தட்டியது)
தயிர் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப

மசாலா:

பட்டை - 2 (சிறு துண்டு)
லவங்கம் - 6
மிளகு - 12
ப்ரவுன் ஏலக்காய் - 1
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 225 கிராம் (உரித்து நறுக்கியது)
வெங்காயம் (நடுத்தரமானது) - 1 (நறுக்கி வறுத்தது)

செய்முறை

* மட்டனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கவும். எலுமிச்சம் பழச்சாறுடன், உப்பு கலந்து மட்டனில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

* கடாயில் நெய்யைக் காய வைத்து, காய்ந்ததும் மசாலாவின் முதல் நான்கு பொருட்களை வறுக்கவும்.

* இப்போது மட்டன், வெங்காயம், பூண்டு இவற்றை வறுத்து மீதமுள்ள மசாலாவைச் சேர்க்கவும்.

* மட்டனை வேக வைத்து குறைந்த தீயில் தயிரை சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

* தேவையான நீர் சேர்த்து, மட்டன் நன்கு மசாலாவுடன் சேர்த்து, வேகும் வரை அடுப்பில் வைக்கவும், கறிமசாலா தூள் தூவவும்.

* வெங்காயம், தக்காளி வைத்து அலங்கரித்து சாப்பிடும் முன் சூடு செய்து பரிமாறவும்.

Sunday, August 4, 2013

வேப்பம்பூ துவையல்



தேவையானவை: வேப்பம்பூ - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காடாயில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும். வேப்பம்பூ, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு வேப்பம்பூ துவையலை பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுப் பூச்சி வரமால் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

கருப்பட்டி பணியாரம்



தேவையானவை: கருப்பட்டி - 200 கிராம், கேழ்வரகு மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி.
செய்முறை: கருப்பட்டியை நன்கு பொடித்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி... கேழ்வரகு மாவு, அரிசி மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி, மாவை சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: கிராமங்களில் வெல்லம், சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியை காபி, டீ, பலகாரம் என இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்துவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

பூண்டு மிளகு குழம்பு



தேவையானவை: தோல் உரித்த பூண்டுப் பல் - 10, மிளகு - 20, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டுப் பல்லை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி, வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து, புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். காடாயில் கடுகு தாளித்து, அரைத்த விழுது, வேக வைத்த பூண்டு, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: பூண்டு வாயுத்தொல்லையை நீக்கும். மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும்.

எள் உருண்டை



தேவையானவை: கறுப்பு எள் - 250 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: எள்ளை தண்ணீர் விட்டுக் களைந்து, கல் அரித்து, வடிகட்டி, வெறும் வாணலியில் போட்டு பொரியும்படி வறுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால்... அதுதான் சரியான பதம்). வறுத்த எள்ளை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகு விட்டு நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்பு: எள், எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா



தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, நன்கு மசித்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீர் சிறிது விட்டு கொதிக்கவிடவும். கம்பி பாகு பதம் வந்த உடன் அதில் மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து, இதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரி அடுப்பில் வைத்து சுட்டும் சாப்பிடலாம். வேக வைத்து அப்படியே சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.