Saturday, October 12, 2013

புளி - பச்சை மிளகாய் ஊறுகாய்

 தேவையான பொருட்கள்:
 பச்சை மிளகாய், உப்பு - தலா அரை கிலோ,
 புளி - 200 கிராம், 
கடுகு, எள் - தலா 100 கிராம், 
வெந்தயம், மஞ்சள் பொடி - தலா 50 கிராம்,
 நல்லெண்ணெய் - கால் கிலோ,
 தண்ணீர் - கால் லிட்டர். 
செய்முறை: 
பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, உப்பை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கடுகு, வெந்தயம், எள் மூன்றையும், வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும். எண்ணெயை கடாயில் விட்டு பச்சை மிளகாய்களை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு புளி, உப்பு ஊற வைத்ததைப் பிசைந்து வடிகட்டி, மஞ்சள் பொடி போட்டு, இதில் ஊற்றவும். புளிக் காய்ச்சல் போன்று எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை கொதிக்க வைத்து, கீழே இறக்கி, இதனுடன் கடுகு, எள், வெந்தயப் பொடியைக் கலக்கவும். ஜாடிகளில் போட்டு ஆறிய பின்பு மூடி வைக்கவும். குறிப்பு: இது 6 மாதம் வரை கெடாது. சாதத்தில் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். உப்புமா, தோசை, இட்லி, தயிர் சாதத்துக்கும் ஏற்றது.

இஞ்சி தொக்கு

 தேவையானவை:
பொடியாக நறுக்கிய இஞ்சி - 3 டேபிள்ஸ்பூன்,
 சாம்பார் வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
புளி தண்ணீர் - ஒரு கப்,
பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
சீரகப்பொடி - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: 
மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கிள்ளிய காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் பொன்னிறமாகும் வரை வைக்கவும். வெளியே எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய இஞ்சி, வெங்காயம், உப்பு, அரைத்த மசாலா விழுதைப் போட்டு மேலும் 2 அல்லது 3 நிமிடம் 'மைக்ரோ ஹை'-ல் வைக்கவும். நடுவில் கிளறிவிடவும்.எண்ணெய் மேலே மிதக்க ஆரம் பிக்கும் போது சிறிது தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு புளி தண்ணீர், உப்பு, தேங்காயைப் போட்டு கெட்டியாகும் வரை 5 அல்லது 7 நிமிடம் சமைக்கவும்.

கம்புமாவு உருண்டை

தேவையானவை:
 கம்பு மாவு - ஒரு கப்,
பொடித்த வெல்லம் - கால் கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
துருவிய முந்திரி - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - 4.  
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, அதில் கம்பு மாவைப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக் கரைத்து, மணல் நீக்க வடிகட்டி, கொதிக்கவைக்கவும். கெட்டியானதும், அதில் முந்திரி துருவல், ஏலக்காய்தூள், வறுத்த கம்புமாவு.. எல்லாவற்றையும் சேர்த்து, நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டிவைக்கவும். திருக்கார்த்திகைக்கு, பொரி உருண்டைக்கு பதில் வித்தியாசமான இந்த கம்புமாவு உருண்டை செய்து பாருங்களேன்!
கம்புமாவு உருண்டை: வெள்ளைச் சோளமாவு, வெள்ளை சோளப்பொரி கொண்டும் இதே போல உருண்டைகள் தயாரிக்கலாம். வித்தியாசமான சுவை தரும்.

மிக்ஸ்டு தால் பாயசம்



தேவையானவை: பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, மசூர் தால் - தலா அரை கப், வெல்லப் பாகு - ஒரு கப், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், மில்க்மெய்டு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப் பருப்பு, திராட்சை, கொப்பரை தேங்காய் (சேர்த்து) - 50 கிராம்,  நெய் - 100 மில்லி.
செய்முறை:  பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, மைசூர்பருப்பு மூன்றையும் நன்கு கழுவி, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பருப்புகளை வேறொரு பாத்திரத் தில் சேர்த்து, அதனுடன் வெல்லப் பாகு, மில்க்மெய்டு, சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை, பொடியாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் சேர்த்து வதக்கி, பாயசத்தில் சேர்த்து (நெய்யையும் சேர்க்கவும்), கலந்து, இறக்கி சூடாகப் பரிமாறவும்.

Friday, October 11, 2013

சாப்பிட அரிசி ஜாமூன்



  தேவையானவை: 
பச்சரிசி -- ஒரு கப்,
பால் - ஒரு கப்,
 தண்ணீர் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், டால்டா - தேவையான அளவு,
முந்திரிப்பருப்பு - சிறிதளவு, ஏலப்பொடி - அரை டீஸ்பூன், பன்னீர் - ஒரு டீஸ்பூன். செய்முறை:
 அரிசியைக் கழுவி, பாலும், தண்ணீரும் கலந்து அதில் அரிசியை வேக விடவும். அரிசி பாதியளவு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்தெடுத்து, ஏலப்பொடி கலந்து வைக்கவும். வாணலியில் டால்டாவைப் போட்டு சூடாக்கவும். அரைத்த மாவை சிறிய குலோப்ஜாமூன் போல உருட்டி, நடுவில் பாதி முந்திரியை வைத்து மீண்டும் நன்றாக உருட்டவும். இதேபோல் எல்லா மாவையும் செய்து, சூடான டால்டாவில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும் (எண்ணெயிலும் பொரிக்கலாம்). மாவை சற்று நீளவாக்கில் உருட்டினால் பார்க்க அழகாக இருக்கும். பின் வேறொரு வாணலியில் சர்க்கரை அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். லேசான பாகு வந்ததும் இறக்கி பன்னீரை கலக்கவும். பாகு சூடாக இருக்கும் போதே ஜாமூன்களை போட்டு அரைமணி நேரம் ஊறியதும், தனியே எடுத்து வைக்கவும். மேலே சர்க்கரை தூவி அலங்கரிக்கவும். பார்க்க அழகாக இருக்கும். சாப்பிடவும் ருசியாக இருக்கும். அரிசி ஜாமூன்: ஒரு கப் அரிசி அரைத்த விழுது என்றால், அதில் சர்க்கரை சேர்க்காத கோவா கால் கப் சேர்த்து கலந்து உருட்டி ஜாமூன் செய்தால் மிருதுவாக இருக்கிறது. சுவையும் சூப்பர்

டேட்ஸ் அண்ட் நட்ஸ் பால்போளி

  தேவையானவை: முந்திரிப்பருப்பு - அரை கப், பேரீச்சம்பழம் - அரை கப், மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், பால் - ஒரு லிட்டர், ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, எண்ணெய் -- பொரிக்க தேவையான அளவு. செய்முறை: முந்திரிப்பருப்பையும், பேரீச்சம்பழத்தையும் தனித்தனியாக பாலில் அரைமணி நேரம் ஊறவைக்கவும். பின் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதுகளை மைதாமாவு சேர்த்துப் பிசைய வேண்டும். பிசைந்த மாவை சிறுசிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, பாலை அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவும். சிறிது கெட்டியாக ஆனவுடன் சர்க்கரையை போட்டு கொதிக்கவிடவும். கொதித்ததும் கீழே இறக்கி குங்குமப்பூ, ஏலக்காய் பொடி சேர்க்கவும். பொரித்த பூரிகளை சூடான பாலில் ஒவ்வொன்றாக அமிழ்த்தி எடுத்து, அந்த பூரிகளின் மேல் கொஞ்சம் சர்க்கரையையும் ட்ரை ஃப்ரூட்ஸையும் தூவி அலங்கரிக்கவும்.
 டேட்ஸ் அண்ட் நட்ஸ் பால்போளி: பாலை சிறிது குறைத்து, அதற்கு பதில் மில்க்மெய்ட் சேர்த்தால், ருசி இன்னும் அபாரம்!

தயிர் பாதுஷா

  தேவையானவை: 
மைதா மாவு - இரண்டரை கப், டால்டா - ஒரு கப்,
 சர்க்கரை - இரண்டரை கப், சமையல்சோடா - ஒரு டீஸ்பூன், தயிர் - அரை கப்,
எண்ணெய் - தேவையான அளவு, அலங்கரிக்க செர்ரி - சிறிதளவு, வெந்நீர் - அரை டம்ளர். செய்முறை:
முதலில் தயிர், டால்டா, சமையல்சோடா இம்மூன்றையும் மிக்ஸியில் ‘விப்’பரில் அடிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிக்ஸியை கொதிக்கும் நீர்விட்டு கழுவி, அந்த நீரையும் தயிர் கலவையில் விடவும். மைதா மாவை அதில் போட்டு நன்றாகப் பிசைந்து, சிறு சிறு பாதுஷாக்களாக செய்து, மிதமான தீயில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு சர்க்கரையை இரட்டை கம்பிப் பதத்தில் (சற்று கெட்டியான) பாகு வைத்து, பாதுஷாக்களை அதில் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து, மேலே செர்ரிப் பழங்களை வைத்து அலங்கரிக்கவும். தயிர் பாதுஷா: டால்டாவின் மணம் பிடிக்காதவர்கள் நெய் சேர்த்துச் செய்யலாம்

முட்டை பிரியாணி


  தேவையான பொருட்கள் 
 பாசுமதி அரிசி - 2 ஆழாக்கு
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
தாளிக்க - பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை  
செய்முறை 
 * முட்டையை வேக வைத்து `கட்` செய்து கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கீறிக்கொள்ளவும். * அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் (தேவைப்படுபவர்கள் டால்டா சேர்க்கலாம்) ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். * பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். * தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கிளறவும். தயிர் சேர்க்கவும். * இத்துடன் அரிசியையும் சேர்த்துக் கிளறவும். அரிசியைப்போல் ஒன்றரை மடங்கு நீர் ஊற்றவும். (சாதாரண பச்சரிசிக்கு இருமடங்கு நீர் ஊற்றவும்), அரிசி வெந்து வரும் சமயம் நறுக்கிய முட்டை துண்டுகளை மேலே சேர்த்து தம் கட்டி மூடிவிடவும். உப்பை சரி பார்த்து இறக்கவும்.

நெல்லிக்காய் சூப்


 தேவையான பொருட்கள்
 நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் - 4 கப்
கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு
செய்முறை
 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
நெல்லிக்காய் விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.

முடக்கற்றான் சூப்













தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை - 1 கப் 
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 2 டீஸ்பூன் 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 3 
புளி - எலுமிச்சை அளவு 
பெருங்காயம் - சிறிதளவு 
பூண்டு - 1 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும்.
 சூடாகப் பரிமாறவும்
முடக்கற்றான் இதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.

சுக்கு குழம்பு

தேவையான பொருட்கள்
 சுக்கு - 1 அங்குலத்துண்டு
சின்ன வெங்காயம் -15
தக்காளி - 1
கறிவேப்பில்லை -சிறிது
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுபல் - 10
செய்முறை: 
 *வெங்காயம்+பூண்டு+ அனைத்தையும் பொடியாக கட் செய்யவும்.சுக்கை நசுக்கிக் கொள்ளவும். *புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும். *ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சுக்கை வறுத்து தனியாக வைக்கவும். *வறுத்த சுக்கு+தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும். *பின் வடகம்+கறிவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கவும். *வதங்கிய பின் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். *நன்கு கொதித்த பிறகு தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
 இந்த குழம்பு மறுநாள் சாப்பிட சூப்பரா இருக்கும்.

Saturday, October 5, 2013

ராகி வெஜ் அடை

 தேவையானவை:
 ராகி மாவு - ஒரு கப்,
 மாவாக்கிய கோதுமை ரவை (அ) கோதுமை மாவு - ஒரு கப், 
பச்சரிசி மாவு (விருப்பப்பட்டால்) - கால் கப்,
காய்கறி கலவை - ஒரு கப் (துருவிய கேரட், 
வெங்காயம், கோஸ், முள்ளங்கி), சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், 
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், 
நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு. 
செய்முறை: 
எல்லா பொருட் களையும் ஒன்று சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வாழை இலை (அ) பாலித்தீன் ஷீட்டில் எண்ணெய் தடவி கனமான அடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும். 

Tuesday, October 1, 2013

பகோடா குழம்பு

தேவையானவை:
 புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
 பகோடாவுக்கு: 
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்க  
செய்முறை:
 *கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி சோம்பு+உப்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக நீர் விடாமல் அரைக்கவும். *அதனுடன் வெங்காயம்+கொத்தமல்லித்தழை சேர்த்து பகோடாகளாக பொரித்தெடுக்கவும். *பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+சாம்பார் பொடி+உப்பு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். *குழம்பு நன்கு கொதித்ததும் பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும். : கடலைமாவிலும் பகோடாவை செய்து போடலாம்.

மில்க் அல்வா

 தேவையானவை: 
பால் - 4 கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 1 கப்,
ரவை - அரை கப், சீ
விய பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை.
 செய்முறை: 
சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, மேலே சொல்லியிருக்கும் மற்ற பொருள்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து, அடி கனமான பாத்திரம் ஒன்றில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது, நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி... கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம். குறிப்பு: ஒரு கப் அளவு என்பது 200மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்.

பாஸந்தி

  தேவையானவை: 
பால் - 2 லிட்டர்,
சர்க்கரை - முக்கால் கப்,
சீவிய பாதாம், பிஸ்தா - தலா 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கார்ன்ஃபிளார் மாவு - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: 
வாயகன்ற, கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள். அடிக்கடி கிளறவேண்டாம் (அப்போதுதான் ஆடை படியும்). மேலே படியும் ஆடையை, ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துப் போட்டு, சேகரித்துக்கொண்டே வாருங்கள். பாலில் முக்கால் பாகம் வற்றி, கால் பங்குக்கு வந்ததும் சர்க்கரையைச் சேருங்கள். அத்துடன், கால் கப் தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளாரையும் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடுங்கள். பின்னர், சேகரித்து வைத்துள்ள ஆடையை அத்துடன் சேர்த்து, ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சீவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை அதில் கலந்து, ஆறவிட்டு, நன்கு குளிரவைத்துப் பரிமாறுங்கள்.