Wednesday, July 31, 2013

கமகம காலிஃப்ளவர் சூப்

தேவையானவை: காலிஃப்ளவர் - மிகவும் சிறியது (நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, லவங்கம் - 2, மிளகு - 4, வெண்ணெய் -  ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - அரை டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொடியாக நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவருடன் லவங்கம், மிளகு, 2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவிட்டு மிக்ஸியில் மசித்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, மைதா சேர்த்து நன்கு வதக்கி, பால் விட்டு நன்கு கலக்கவும். இதனுடன் காலிஃப்ளவர் கலவையை சேர்த்து, கொஞ்சம் நீர் ஊற்றி, 2 கொதி விட்டு... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பனீர் ஸ்டஃப்டுசப்பாத்தி

தேவையானவை: மைதா, கோதுமை மாவு, பனீர் (துருவியது) - தலா ஒரு கப், முந்திரி - 10 (பொடியாக நறுக்கவும்), சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3 எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கவும். மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். ஒரு கப்பில் பனீர், முந்திரி, சாட் மசாலா, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பிசைந்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதனுள் பனீர் கலவையை வைத்து மூடி, சிறிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி சூடாக பரிமாறலாம்.

டிரை ஃப்ரூட்ஸ் ரைஸ்

தேவையானவை: முந்திரி, பாதாம், திராட்சை எல்லாம் சேர்த்து - அரை கப், டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு, பாசுமதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு -  3 பல், பச்சை மிளகாய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். குக்கரில் தேங்காய்ப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்து, கழுவிய அரிசியை சேர்த்து மூடி, ஒரு விசில் வந்ததும் எடுக்கவும். வாணலியில்  ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, பாதாமை நன்கு வறுக்கவும். அடுப்பை நிறுத்தி, திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும் (டூட்டிஃப்ரூட்டியை அப்படியே ஃபிரெஷ்ஷாக வைக்கவும்). வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காயை தாளித்து... பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து நன்கு வதக்கி, கடைசியாக டூட்டிஃப்ரூட்டி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால்... விருந்தினர்களை 'ஒன்ஸ் மோர்’ கேட்கச் செய்யும்.

பனீர் வித் கேப்ஸிகம்

தேவையானவை: பனீர் - 200 கிராம் (வெந்நீரில் கழுவி சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று, வெங்காயம் - 2, தக்காளி - 6, பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சிறு சதுரங்களாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு தக்காளி வேகும்வரை கொதிக்கவிடவும். தக்காளி வெந்ததும் பனீர், குடமிளகாய் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

பனீர் ஜால் ஃப்ரீஸ்

தேவையானவை: பனீர் - 200 கிராம், கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாஸ்  - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் -  தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சதுர சதுரமாக 'கட்’  செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கேரட், வெங்காயம், குடமிளகாயை நீள நீளமாக ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கவும், அடி கனமான வாணலியில் வெண்ணெயை உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது, கேரட், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக பனீரை சேர்த்து நன்கு கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவி பரிமாறலாம்).

உருளை - காலிஃப்ளவர் சீஸ் கிராக்கெட்ஸ்

தேவையானவை: காலிஃப்ளவர் - மீடியம் சைஸ், உருளைக்கிழங்கு - 2, துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், மைதா - 4 டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைக்கவும்.
காலிஃப்ளவரை 2 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். இதனுடன் மசித்த உருளை, துருவிய சீஸ், அரைத்த பச்சை மிளகாய் விழுது, உப்பு, 2 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவம் கொடுக்கவும். இதுதான் சீஸ் கிராக்கெட்ஸ். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவைச் சற்று நீர்க்கக் கரைத்து அதில் சீஸ் கிராக்கெட்ஸை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித் தெடுத்து பரிமாறவும்.

பிரெட் - ஆலு கபாப்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பச்சைப் பட்டாணி -  ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும், மைதாவை அரை கப் நீரில் கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளை - பட்டாணி கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் 'கபாப்’ தயார் செய்து கொள்ளவும். கபாப்பை மைதா கரைசலில் தோய்த்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து, பரிமாறவும்.

மீல்மேக்கர் பிரியாணி

தேவையானவை - மீல்மேக்கர் கோலா வுக்கு: மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) - 25, பொட்டுக்கடலை - கால் கப் (மிக்ஸியில் பொடிக்கவும்), இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 5 பல், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பிரியாணிக்கு: பாசுமதி அரிசி - 2 கப், தேங்காய்ப் பால் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா 3, பச்சை மிளகாய் - 5, இஞ்சி -  பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்,  புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து பிழிந்து, தண்ணீரில் அலசி நன்கு நீரை ஒட்டப் பிழிந்து, ஒன்றிரண்டாக 'கட்’ செய்து கொள்ளவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து,  மிக சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுத்தால்... மீல்மேக்கர் கோலா ரெடி.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும், பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து, ஒரு கப் நீர் விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். (வதக்கும்போது சிட்டிகை உப்பு சேர்க்கவும்). பிறகு, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதில்  ஊற வைத்த அரிசி மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடத்துக்குப்  பிறகு இறக்கவும்.
பிரியாணியுடன் மீல்மேக்கர் கோலா உருண்டைகளை சேர்த்து, சாதம் உடையாமல் கிளறி, ஆனியன் - தயிர் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

உருளை மசாலா கிரேவி

தேவையானவை: உருளைக்கிழங்கு - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2, தயிர் ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தோல் சீவிய இஞ்சி ஆகியவற்றை வெறும் வாணலியில் சூடுபட வறுத்து, பிறகு ஆறவைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
தோலுரித்த உருளையை முள் கரண்டியால ஆங்காங்கே குத்தி உப்பு சேர்த்த தயிரில் அரை மணி நேரம் ஊறவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தயிரில் ஊறிய உருளைக்கிழங்கை அதில் சேர்த்து, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதித்ததும், மிக்ஸியில் பொடித்த பொடியைத் தூவி மேலும் ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தக்காளி - வெண்ணெய் சூப்

தேவையானவை: தக்காளி - 5, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான வாணலியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து, 3 டம்ளர் நீர் ஊற்றி, 10 நிமிடம் வேகவிட்டு, ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, அரைத்து வடிகட்டவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, மைதாவை சேர்த்துக் கிளறி, பால் சேர்த்து நன்கு கலக் கவும். ஏற்கெனவே வடிகட்டி வைத்திருக் கும் தக்காளி சாறை அதில் ஊற்றி, நன்றாக கலக்கி, மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

Tuesday, July 30, 2013

முருங்கைக்காய் சூப


தேவையானவை: முருங்கைக்காய் - 4, பாசிப்பருப்பு -  ஒரு டேபிள்ஸ்பூன் (குழைய வேகவிடவும்), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 2 பல், வெண்ணெய், கார்ன்ஃப்ளார் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கார்ன்ஃப்ளாரை கால் கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு, ஆறியதும் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் வெண்ணெயை  உருக்கி, பொடி யாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டை சேர்த்து நன்கு வதக்கி, மசித்து வைத் துள்ள பாசிப்பருப்பு - முருங்கை கலவை மற்றும் 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி... மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

பட்டாணி - பட்டர் கிரேவி

தேவையானவை: பச்சைப் பட்டாணி - 200 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பெரிய தக்காளி - 5, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லித்தழை - சிறிய கட்டு, வெண்ணெய், எண்ணெய் - தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறவும். பிறகு, தேவையான நீர், பட்டாணி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, மூடி வைக்கவும் (பட்டாணி வேகும் வரை). பட்டாணி வெந்து, கிரேவி கெட்டியானதும் இறக்கி, மல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

குடமிளகாய் - வெள்ளரி சாலட்

தேவையானவை: குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், சர்க்கரை -  ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்கு கழுவி, சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றுடன் மிளகுத்தூள், சாட் மசாலா, சர்க்கரை உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

பனீர் க்ரீன் கிரேவி

தேவையானவை: பனீர் - 100 கிராம் (மிதமான சூட்டில் இருக்கும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்), பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 3, புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கசகசா - அரை டீஸ்பூன், தயிர், உப்பு, வெண்ணெய், எண்ணெய் - சிறிதளவு
செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கசகசா சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் வெண்ணெயை சேர்த்து சூடாக்கி... அதனுடன் அரைத்த விழுது, சிறிதளவு நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது பனீர் துண்டுகளைச் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

ஆரஞ்சு - வாழைப்பழ சாலட்

தேவையானவை: ஆரஞ்சு சுளைகள் - 10, வாழைப்பழம் - ஒன்று, அன்னாசிப்பழம் - ஒன்று, ப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு, மாதுளை முத்துக்கள் - சிறிதளவு.
செய்முறை: ஆரஞ்சு சுளைகளை நார், விதை எடுத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும். வாழைப்பழம், அன்னாசிப்பழத்தை பொடியாக நறுக்கவும். பழங்களுடன் ப்ரெஷ் க்ரீம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, 'ஜில்’லென்று பரிமாறவும்.

வெஜ் கறி

தேவையானவை: வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று,  பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - ஒரு கப், பச்சை மிளகாய் - 4 , இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், முந்திரி - 8, தேங்காய்ப் பால் - அரை கப், ஃப்ரெஷ் தயிர் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - அரை கட்டு, ஃப்ரெஷ் க்ரீம், நெய் - தலா 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய் துருவல் - ஒரு கப், லவங்கம், ஏலக்காய் - தலா 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயம், பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை சின்னச் சின்ன சதுர  துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, மற்ற காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் மசாலா, உப்பு என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கி, கொஞ்சம் நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, தேங்காய்ப் பால், தயிர், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். இறக்கும் முன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும்.

பனீர் கீர்

தேவையானவை: பால் - அரை லிட்டர், பனீர் துண்டுகள் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 6, சர்க்கரை - கால் கப் அல்லது விருப்பத்துக்கேற்ப.
செய்முறை: பனீர் துண்டுகளை மிதமான சூட்டில் இருக்கும் நீரில் நன்கு கழுவி துருவிக் கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் பால், சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை சூடாக்கவும். பாலை சற்று ஆற வைத்து... பனீர், பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

ஆப்பிள் கோவா

தேவையானவை: ஆப்பிள் - 2, இனிப்பு இல்லாத கோவா, சர்க்கரை - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 6, நெய் - கால் கப்.
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி, துருவிக் கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் சீவிய முந்திரி, பாதாமை லேசாக வறுத்து எடுக்கவும். வாணலியில் துருவிய ஆப்பிளை சேர்த்து (அடுப்பை 'சிம்’மில் வைத்து)  நன்கு கிளறவும். 10 நிமிடம் கழித்து பால்கோவா, சர்க்கரை சேர்த்து மேலும் கிளறவும் (சர்க்கரை சேர்த்தவுடன் சற்று இளகும்). எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி, பரிமாறவும்.

மாதுளை - உருளை ராய்த்தா

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்), மாதுளை முத்துக்கள் - ஒரு கப், கறுப்பு திராட்சை - 10, கெட்டித்தயிர் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடி யாக நறுக்கவும்).
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கொத்த மல்லியை பொடியாக நறுக்க வும். தயிரில், எல்லாப் பொருட் களையும்  சேர்த்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். 

ஃப்ரூட் கஸ்டர்ட்

தேவையானவை: பால் - 2 கப், வெனிலா கஸ்டர்ட் பவுடர் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, பைனாப்பிள், வாழை போன்ற பழங்களை பொடியாக நறுக்கிய கலவை -  ஒரு கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அரை கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கரைக்கவும். மீதியுள்ள பாலை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கஸ்டர்ட் கரைசலை ஊற்றி (அடுப்பை 'சிம்’மில் வைத்து) மேலும் கொதிக்கவிடவும். பிறகு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். ஆறியதும் பழக் கலவை, தேன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து, ஜில்லென்று பரிமாறவும்.

Monday, July 29, 2013

ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - ஒரு கப் (ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்), வெங்காயம் - 2 (துருவவும்), தக்காளி - 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் நெய், உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, துருவிய வெங்காயத்தை பிழிந்து சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக மசித்து வைத்துள்ள ஸ்வீட் கார்னையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உப்பு சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
சப்பாத்தி மாவைக் கிண்ணம் போல செய்து ஸ்வீட் கார்ன் கலவையை கொஞ்சம் எடுத்து அதனுள் வைத்து மூடி, சற்று கனமான சப்பாத்திகளாக தேய்த்து, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

செஷ்வான் வெஜ் நூடுல்ஸ்


தேவையானவை: பிளெய்ன் நூடுல்ஸ் - 200 கிராம், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, கோஸ் - 50 கிராம், வெங்காயத்தாள் - சிறு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, பூண்டு - 6 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ் ஆகியவற்றை மிகவும் மெல்லியதாக, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நீரை சேர்த்து சூடாக்கி, அதில் நூடுல்ஸை உடைத்துப் போடவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு நீரை வடித்துவிட்டு, நூடுல்ஸை குளிர்ந்த நீரில் அலசி தனியே வைக்கவும். பிறகு அடுப்பில் தவாவை வைத்து சூடாக்கி, நூடுல்ஸை அதன்மேல் பரப்பி, நூடுல்ஸின் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணெயைப் பரவலாக ஊற்றி 2 முறை திருப்பிவிட்டு எடுத்து வைக்கவும். அகலமான வாணலியில் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைப்பது அவசியம்). காய்கள் வெந்ததும் கடைசியாக நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
இந்த செஷ்வான் வெஜ் நூடுல்ஸ் இருந்தால், விருந்து களைகட்டும்

நெல்லிக்காய் போளி

தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பெரிய நெல்லிக்காய் - 10, வெல்லம் (பொடித்தது) - 200 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.
செய்முறை: மைதா மாவுடன் கேசரி பவுடர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, நெல்லிக்காயைப் போட்டு, ஆறிய உடன் எடுத்து உதிர்த்து, கொட்டை நீக்கி வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்து, தண்ணீரை வடிக்கவும்... தேங்காய் துருவல், வறுத்த கடலைப்பருப்பு, வேக வைத்த நெல்லிக்காய், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாக கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய உருண்டையாக உருட்டி, சப்பாத்தி வடிவத்தில் சிறியதாக இட்டு, உள்ளே பூரண உருண்டையை வைத்து மூடி, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது நெய் தடவி, கைகளால் போளியாக தட்டவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு போளியாக போட்டு, சிறிது நெய்விட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: பூரணத்தை முதல் நாளே தயாரித்து வைத்தால், போளி தயாரிப்பது மிகவும் சுலபம்.

கறிவேப்பிலை குழம்பு



தேவையானவை: கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, கடுகு  - தலா ஒரு டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். கறிவேப்பிலையை தனியாக சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, எல்லாவற்றையும் சேர்த்து... புளி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அரைத்ததை சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில்  இருக்கும். மழைக்காலத்தில் காய் வாங்க முடியாமல் போகும்போது, இந்தக் குழம்பு மிகவும் உதவும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பாகற்காய் ரோஸ்ட்

தேவையானவைநீளமான பாகற்காய் - 250 கிராம், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  பொடித்த வெல்லம்  - ஒரு டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை வில்லை வடிவமாக நறுக்கி விதையை எடுக்கவும். புளியைக் கரைத்து பாகற்காயில் விட்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, தண்ணீர் வடிக்கவும். வேக வைத்த பாகற்காயுடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசிறிய காயை வறுக்கவும். வெல்லத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு பாகற்காய் மிகவும் நல்லது. பாகற்காயில் ஜூஸ் தயாரித்தும் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை பாகற்காயை  சமையலில் சேர்ப்பது, உடலுக்கு நன்மை தரும்.

சுண்டைக்காய் கூட்டு

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, நசுக்கிய சுண்டைக்காயை சேர்த்து, லேசாக வதக்கி, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து... வேக வைத்த சுண்டைக்காயுடன் கலந்து, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். கடுகு தாளித்து இதில் சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு கலக்கவும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் அல்லது பச்சை மணத்தக்காளி - 100 கிராம், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,  எண்ணெய் - 10 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... சாம்பார் பொடி போட்டு வறுத்து, மணத்தக்காளியை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு சேர்த்து, புளியைக் கரைத்து விட்டு, கொதிக்க வைத்து இறக்கி, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.
குறிப்பு: மணத்தக்காளி காய்க்கும் சீஸனில் அதை வாங்கி... தயிரில் உப்பு சேர்த்து, மணத்தக்காளியை போட்டு ஊற வைத்து, காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால்... வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.

புதினா சீரக ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், நெய் - 6 டீஸ்பூன், கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,  பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு லேசாக வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். புதினாவை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு கடுகு தாளித்து, சீரகம், பொட்டுக்கடலை, இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், புதினாவை சேர்த்து வதக்கவும். வதக்கியதை சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.

துவரை வடை

தேவையானவை: துவரைக்காய் - 200 கிராம், பொடியாக நுறுக்கிய இஞ்சி சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, மிளகு - 4, பூண்டுப் பல் - ஒன்று, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரைக்காயை உரித்து பருப்பை மட்டும் எடுக்கவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, தண்ணீர் வடித்து... துவரை, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, பூண்டுப் பல், உப்பு சேர்த்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைத்து, வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து மாவை வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: துவரைக்கு பதிலாக மொச்சை, சோளத்திலும் இதே முறையில் வடை தயாரிக்கலாம்.

கீரை குணுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறு துண்டு, முளைக்கீரை (பொடியாக நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பருப்புகளுடன் தோல் சீவி நறுக்கிய இஞ்சியையும், மிளகையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய  கீரையை அரைத்த மாவுடன் கலந்து... உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டை அளவில் கிள்ளிப் போட்டு (உருட்டக் கூடாது), பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: கீரை குணுக்கும் சட்னியும் சிறந்த காம்பினேஷன். மோர்க்குழம்பில் கூட இந்த குணுக்கை போடலாம்.

Sunday, July 28, 2013

மிதிபாகற்காய் பிட்லை

தேவையானவை: மிதிபாகற்காய் (சிறிய பாகற்காய்) - கால் கிலோ, புளி - ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தனியா - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை நறுக்கி, விதை எடுத்து, எண்ணெய் விட்டு வதக்கவும். புளியை கரைத்து இதனுடன் சேர்த்து... சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதனுடன்  வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கொதிக்கும் சாம்பாருடன் கலக்கவும். அதில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: மிதி பாகற்காயை விதை இல்லாமல் பிஞ்சாக பார்த்து வாங்கினால், அப்படியே வதக்கலாம்.

புடலங்காய் மிளகூட்டல்

தேவையானவை: புடலங்காய் - 250 கிராம், மிளகு - 6, தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புடலங்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிளகு, தேங்காய் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த புடலங்காயுடன் கலந்து, வெந்த பாசிப்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: புடலங்காய், பத்திய சமையலுக்கு ஏற்ற காய்.

வாழைத்தண்டு புளிப்பச்சடி

தேவையானவை: பொடித்த வெல்லம் - ஒரு சிறிய கப் வாழைத்தண்டு - ஒரு துண்டு, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், மோர் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி நார் எடுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை  சிறிது நேரம் போட்டு வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, நறுக்கிய வாழைத் தண்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து இதனுடன் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து, வெல்லம் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: வாழைத்தண்டு, பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். வாழைத்தண்டில் ஜூஸ் தயாரித்து அருந்தலாம்.

பப்பாளி பணியாரம்

தேவையானவை: பப்பாளிப்பழத் துண்டுகள் - 10, இட்லி அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், நெய் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப்.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். சிறிது மசிந்த உடன் பப்பாளித் துண்டுகளையும் சேர்த்து அரைக்கவும். பணியாரக் கல் குழியில் நெய் தடவி, சிறிய கரண்டியால் மாவை ஊற்றி, சிறிது நெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு அடுக்கவும்.
குறிப்பு: பப்பாளி, கண்ணுக்கு மிகவும் நல்லது.

திப்பிலி ரசம்

தேவையானவை: அரிசி திப்பிலி - 10, கண்டதிப்பிலி - சிறிதளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் புளிக் கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூளை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.

பூண்டு குழம்பு

தேவையானவை: பூண்டு - 200 கிராம், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு சிறிய கப், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பூண்டை தோல் உரித்து, பூண்டுப் பல்லை இரண்டாக நறுக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். நறுக்கிய பூண்டை இதில் சேர்த்து, சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல்லையை குறைக்கும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கும் பூண்டு மிகவும் நல்லது.

பருப்பு உருண்டை குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, பூண்டுப் பல் - 4, புளி - 100 கிராம், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், பூண்டுப் பல், இஞ்சி சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாகக் கிளறி, தேவையான உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். கடாயில் புளியைக் கரைத்து விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து...  வேக வைத்த உருண்டைகளைப் போட்டு சிறிது  நேரத்துக்குப் பிறகு இறக்கி, கடுகு தாளிக்கவும்.
குறிப்பு: மசாலா வாசனையை விரும்புபவர்கள்... பருப்புடன் பட்டை, சோம்பு சேர்த்து அரைத்து குழம்பு செய்யலாம்.

புளிப் பொங்கல்

தேவையானவை: அரிசி (ரவை போல் உடைத்தது)  - 200 கிராம், புளி ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில், ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் புளித் தண்ணீர் விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், உப்பு சேர்த்து, ரவையைத் தூவிக் கிளறி, பாத்திரத்தை குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: புளிப்பு - காரம் காம்பினேஷன் ருசியில் அசத்தலாக இருக்கும் இந்த பொங்கல். சூடாக சாப்பிட்டால்... சுவை சூப்பரோ சூப்பர்!

ஸ்டீம்டு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி ரவை - 250 கிராம், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் அளந்து, தாளித்ததுடன் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும். அதில் தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கொதித்ததும், அரிசி ரவையை சேர்த்துக் கிளறவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி. இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தேவையானால், விருப்பமான காய்களை நறுக்கி சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.

நூடுல்ஸ் சமோசா

தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், மைதா மாவு - 100 கிராம், கேரட் துருவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கோஸ் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். நூடுல்ஸை குழையாமல் லேசாக வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கேரட், கோஸ், வெங்காயம், பச்சை மிளகாயை உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மைதா மாவை பிசைந்து சிறு அப்பள வடிவில் இட்டுக் கொள்ளவும்.
வதக்கி வைத்து இருக்கும் காயுடன், வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பூரணம். அப்பள வடிவில் இட்ட மாவின் நடுவில் சிறிது பூரணம் வைத்து, சமோசா வடிவில் நன்கு மூடி, எண்ணெயில் பொரிக்கவும்.
குறிப்பு: நூடுல்ஸை அதிகமாக வேகவிடக் கூடாது. நான்கு அல்லது ஐந்து சமோசா தயாரித்து ஒரே தடவையில் பொரித்து எடுக்கலாம். 

Saturday, July 27, 2013

பிடிகருணை மசியல்

தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று, எலுமிச்சம் பழம்  - ஒரு மூடி, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, கடுகு, கடலைப்பருப்பு பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணைக்கிழங்கை தோல் சீவி, வேக வைத்து, மசித்து, புளிக் கரைசல் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு தாளித்து, இதனுடன் பெருங்காயத்தூளும் சேர்க்கவும். நிறைவாக, வெல்லத்தை பொடித்துப் போட்டு, எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு, கலந்து இறக்கவும்.
குறிப்பு: மூல நோய் உள்ளவர்களுக்கு கருணைக்கிழங்கு மிகவும் நல்லது.

கத்திரிக்காய் மசாலா ரோஸ்ட்

தேவையானவை: கத்திரிக்காய் - 10, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், புளி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள்,  - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை காம்பு பகுதி நறுக்காமல், அடி பக்கத்தில் மெல்லியதாக கத்தியால் கீறவும். இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், புளி பேஸ்ட், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கத்திரிக்காயின் உள்ளே நிரப்பவும். வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு கத்திரிக்காயாக வதக்கி எடுக்கவும்.
குறிப்பு: இதை தயிர் சாதத்துக்கு தொட்டு சாப் பிடலாம். சூடான சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கீரை வேர்க்கடலை உசிலி

தேவையானவை: முருங்கைக்கீரை-  ஒரு கப், வறுத்த வேர்க்கடலை - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன், கடுகு - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்கீரையை கழுவி சுத்தம் செய்து, ஆய்ந்து வைக்கவும். வறுத்த வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.

வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல்



தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் சோள மாவு கலந்து, தேவையான உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கேரட் துருவல், கோஸ் துருவல், வெங்காயத்தாள், இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து, சிறிது எண்ணெய் விட்டு, காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிய அப்பள வடிவில் இட்டு, உள்ளே வதக்கிய காய்களை சிறிது வைத்து நன்கு சுருட்டவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, சுருட்டியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: முள்ளங்கி, சீஸ் துருவல், பட்டாணியும் சேர்த்து இதேமுறையில் தயாரிக்கலாம்.

பிரண்டை துவையல்

தேவையானவை: நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் - 10, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 2 கொத்து, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரண்டையை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை வறுத்து... புளி, உப்பு, வதக்கிய பிரண்டை சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு: பிரண்டைத் துவையலை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்... அட்டகாசமான ருசியில் இருக்கும். பிரண்டை, பசியைத் தூண்டும்.